மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று தமிழக வெற்றிக் கழகம் உறுதிமொழி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள உறுதிமொழியில், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களின் உறுதிமொழி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ்மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.